*அழுகையே தொழுகையாய் ஆகுமா?*

'நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்று எழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து...நம்முரிமை நாயகனை வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர்' என்று வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறி நெய்யாய் நெக்குருகி
நேயம் வளர்த்தவர் வள்ளலார்.
   அல்லல்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, அவலத்தில் சிக்கிக்கிடக்கும்  ஆன்மாக்களுக்காக-அழுகையைப் புதுவிதமான தொழுகையாக்கிய மெழுகுவர்த்தி ...அவர்.
  நம் தமிழ்க்கவிஞர்களும் நாயன்மார்களும்  ஞானிகளும் 
பெரும்பாலும் அருளமுதம் பெற்று ஆனந்திக்க வேண்டி, அடிவாரம் நனைய அழுதவர்கள்தான்!
   'யானே பொய்..என் நெஞ்சும் பொய்.ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே'
என்பார்.. வான்கலந்த மாணிக்கவாசகர்.
   'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' நிற்பார் ஞானசம்பந்தர்.
   'மார்பாரப் பொழிகண்ணீர்..
மழைவாரும்  இணைவிழிகள்!' என்பது
அப்பர் பெருமானின்  
அருள் பிழியும் தோற்றம்!
  'நெஞ்சு
பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..' என்று
நாட்டுக்காகப் பாட்டில் அழுதார்-  கவியரசர் பாரதியார்!
   இதுபோல் ஏராளமாய் அழுதுள்ளனர்--இன்னும் பலர்!
  ஆனால்...
வள்ளல் பெருமான் ஒருவர்தான் 
அழுகையை உருக்கமாக்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத்
தரிசிக்கும்  அற்புத வழியை அறிமுகம் செய்தார்.
  கற்சிலையின் முன்னால் நின்று கண்ணால் அழுவதே தீர்வாகுமா?
    அழுவது  மட்டுமே அருளைப் பெறுவதற்கான வழியாகுமா?
      அருட்செல்வத்தைப் பெற அவ்வழுகையைத் தவமாக்குவது எங்ஙனம் ... அத்தவமும் மெய்த்தவமாய் ஆவது எவ்வாறு..என்பதை அவர் விளக்கியருளிய கோணம் வித்தியாசமானது.
  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் சொல்லாட்சியில்,  ஆன்ம உருக்கம்தான் உண்மையான கடவுள் வழிபாடு என்பதை அவர் வலியுறுத்தும் விதம் எவரும் சொல்லாதது.
   "சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி! செயலுக்கு தனிப்பெருங்கருணை! " என்று வழிபாட்டை அவர் வடிவமைத்த விதம் வரலாற்றுச் சிறப்புடையது.
  'மண்ணுலகதனில் உயிர்கள்தாம்
வருந்தும் வருத்தத்தைக்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்..!' ---என்று
நைந்து உயிர்வாடி நலிந்து நிற்கும் அவர் நெஞ்சத் தடத்தில் வரைபடமாய் விரிந்து நிற்கும் உயிரிரக்கம் என்னும் ஒப்புரவுக் கொள்கை உலகப்பொதுமை உடையது.
  'எவ்வுயிரும் பொதுவெனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர்? அந்தச் செவ்வியர்தம் செயலனைத்தும் திருவருளின் செயலெனவே தெரிந்தேன்' என்றும்,' யாரே என்னினும் இரங்குகின்றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே' என்றும், இவைபோன்று இன்ன பிறவாறும்
அருட்பா முழுவதும் அழுத்தமாய்ப் பதிவாகியுள்ள அவர்தம் ஆன்ம அனுபவம் இறவாப்பெருவரத்தின் இதயத்துடிப்பாய் நிற்பதென்றால் அது பொய்யன்று; புனைந்துரையுமன்று! மெய்யென்று உணர்வாரே மேன்மக்கள் ஆவர்.
  'கருணையொன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்முயிர்போல் கண்டு' மகிழ்வதுதான் கடவுள் வழிபாடு என்பதே அவர் கண்டுரைத்த கடவுட்கொள்கை.
  ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படும் எந்த அர்ச்சனையும்  அழுகையும் வணக்கமும் வழிபாடும் நீராட்டும் தீபதூபமும் வெற்றுச் சடங்குகள் என்பதை வலியுறுத்திப் பேசுவதே அவர் விண்டுரைத்த சுத்த சன்மார்க்கம்.
  'ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியப்படும்' என்று தெள்ளத்தெளிவாக அவர் அறிவுறுத்துகிறார் .
  பாவ புண்ணியங்களுக்குப் பலரும் தந்தார்கள் பல்வேறு விளக்கம்.ஆய்ந்து பார்த்தால் அத்தனை விளக்கமும் நம் பகுத்தறிவைத்தான் பகடி செய்யும்.ஆனால்,எம்பெருமான் வள்ளலார் எவர்க்கும் புரியுமாறு எளிமையாய்ச் சொன்னார்:
'புண்ணியமென்பது ஜீவகாருண்யம் ஒன்றே.பாவமென்பது ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றே!'என்று!
   "இவ்வுண்மையறிவு வாய்க்கப் பெற்றவர்களே பேரின்ப லாபத்தைப் பெற்றவர்கள் என்றும் அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும்"
என்று சமரச சன்மார்க்கத்தை அவர் சர்வ சுதந்திரமாய்ப் பிரகடனப்படுத்தினார்.
  ஆன்ம உருக்கமும் காருண்யமும் உண்டாக உண்டாகத்தான் கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும் என்பதே அவர் போதித்த புத்தம் புதிய சன்மார்க்க சூத்திரம்.
   "தயிருக்கும் அதைக் கடைகின்ற மத்துக்கும் இடையே நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுதல்போல...ஆன்ம உருக்கத்தின்போது கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டே தீரும்" என்று ஒரு நடைமுறை உவமையின் மூலம் இயற்கைத் தத்துவத்தை இனிக்க இனிக்கப் புரியவைத்தார் அவர்.
  இவ்வண்ணமாய் இயற்கை உண்மைக் கடவுள் வழிபாட்டை எளிவந்த முறையில் இயம்பிச் சென்றவர் எவரும் இலர்.
  "என் வழி தனிவழி.அது இயற்கைப் பொதுவழி. மற்ற வழிகளை எல்லாம் மறுக்கவந்த ஒரே வழி" என்று துணிச்சலாய்ச் சொன்னவர்  அவரன்றி வேறு யார்?

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!