யாருமே அணைக்கவில்லை..!
எரிந்து கொண்டிருக்கிறது..
யாருமே அணைக்கவில்லை..!
---ஏழையின் வயிறு!
இப்படி ஒரு புதுக் கவிதை
எங்கோ படித்த நினைவு!
இந்தத் தீ ..
இன்று நேற்று ஏற்பட்டதா..
எத்தனையோ யுகமாய்
மனித குலத்தோடு
மரிக்காமல்
தொடர்கிறது..இன்றுவரை!
பசிக்காமல் வாழ்கிற பக்குவத்தைப்
படைக்காமல் விட்டானே இறைவன் என்று
பல நேரம் துடிக்கிறது--நெஞ்சு!
எல்லாருக்கும் எல்லாமான வாழ்க்கை
இல்லாமல் போய்விட்டதே என்று
எரிகிறது--மனம்!
எங்கும் இருக்கிறது இல்லாமை!
இல்லாமை இல்லாமல்
இல்லை ஒரு வாழ்க்கை!
இல்லாதவர் படும்பாடு
எழுத்தில் வருணிக்கவும் வார்த்தைகள்
இல்லாமல்தான் போகிறது!
இறைவன் படைப்பில் ஏனிந்தப் பாகுபாடு என்று
ஏராளமாய்க் கேள்விகள்
எழத்தான் செய்கின்றன --எப்போதும்!
நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய வாய்களுக்கு முன்
நற்றமிழ் பேசிட நரம்பில்லாமல் போகிறது!
நலிந்து கிடக்கும் நாட்டின் வரலாறு மாற
நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்!
பசிவயிற்றில் பால்வார்க்க
தற்காலிகமாகவேனும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும் !
என் கிராமத்திலேயே
என் விழிகள் காணும் பசிப் புலம்பல்--
இன்னும் மாறாமல்தான் இருக்கிறது சமூகம்
என்பதைச் சொல்லாமல் சொல்கிறது!
இருப்பவன் கூட
இயலாதவர்களுக்கு இடுவதில்லை எதுவும்!
சொந்த வீட்டிலேயே
சோகமாய்க் கிடக்கிறார்கள் முதியோர்கள்!
ஒருவேளை வாய்க்கு ருசியாய்
உணவு கிடைக்காதா என்று
படபடக்கின்றன--அவர்களின்
பார்வையும் வறண்டுபோன உதடுகளும்!
சிங்காரச் சென்னை விட்டு என்
சிற்றூருக்குச் செல்லும் போதெல்லாம்
ஒருவாய் தேநீருக்கும்
ஒருவேளைச் சாப்பாட்டுக்கும்
என்னிடம் கையேந்த வரும்
பழகிய அந்தப் பழங்காலத் தலைமுறையைப்
பார்க்கும் போதெல்லாம்
சுட்டுவிடும் இதயம்!
இறுதிக் காலத்தில் இப்படித்தான் எல்லோரும்
புறக்கணிக்கப் படுவார்களா...
இது ஒரு சாபக் கேடா..
இதை மாற்ற ஏதாவது செய்தால் என்ன
என்னும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் --
நான் தொடங்க இருக்கும் அறக்கட்டளை!
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்--என்கிறார் வள்ளுவர்!
அடுத்தவர்--அல்லது அடுத்ததன் உணர்வை மதிக்காதவன்
மனிதன் இல்லை!
அவன் நடமாடும் பிணம் என்கிறார்--குறளார்!
வள்ளலாரும் அதை வழி மொழிகிறார்.
எனவே அவர்கள் வழியில் நின்று
அன்ன தானம் --ஞான தானம் -சமாதானம்
பரிசுகள்-உதவிகள் --பாராட்டு-மரம் வளர்த்தல் என்று
பல வழிகளிலும் பொதுத் தொண்டுக்கான
புதுப் பாதை காண்பது என்று முடிவெடுத்துள்ளேன்!
ஆரம்பம் சிரமமாகத் தான் தெரிகிறது!
பசிப் பிணி அறுப்பது
சாதாரண வேலை இல்லை என்பதும் புரிகிறது!
நூறாண்டுகளுக்கும் மேலாய்
வடலூரில் எரியும் அணையாத அடுப்பு
பிரமிப்பாய் இருக்கிறது!
இருக்கிறார்கள் புரவலர்கள் என்று
மனம் திடம் சொல்கிறது!
95 --கெட்டவர்கள் இருந்தாலும்
5 --நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டித்தான்
பூமாதேவியே
பொறுமையாய் இருக்கிறாள்--
என்கிறார் வள்ளுவர்!
வள்ளுவரிடமும் வள்ளலாரிடமும்
இல்லாத தீர்வுகள்
எதுவும் இல்லை என்பது உண்மை அல்லவா!
ஆகஸ்டு 28 --ல்
காலை முதல் நள்ளிரவு வரை
என் கிராமம் காணாத விழாவை
நலிவு மிகக் கொண்டு நடத்த முற்பட்டுள்ளேன்!
நல்லார் துணை வேண்டித் தவம் இருக்கிறேன்!
இளைய தலை முறைக்கு
நன்னெறி புகட்ட வேண்டி
வள்ளலார் பற்றிய ஒரு மாபெரும் பேச்சுப் போட்டி
நடத்துவதற்குத் திட்டமிட்ட போது --
அதற்கான செலவுத் தொகையை
மதிப்புக்குரிய நண்பர்
ராஜகோபாலன் பாபு அவர்கள்
ஏற்றுக் கொண்டார் !
எத்துணை பெரிய இதயம் அவருக்கு!
ஒரு பாரம் இறங்கிய உணர்வில்
உள்ளம் லேசானது!
அடுத்த பெரும் பாரம்
அன்னதானம் தான்!
பாரம் என நினைப்பதே பாவம் என்று என்
பகுத்தறிவு பகர்கிறது!
என்செய்வது..!
சமையலருக்கும்--சமைப்பதற்கும்
நாற்பத்து இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது!
ஒரு நாள் முழுக்க--ஏறத்தாழ
800 -பேருக்குச் சாப்பாடு என்று
நிகழ்ச்சி முடியும் வரை
அறிவிக்கப் பட்டுள்ளது!
பந்தல்-- நாற்காலி--மேடை-- பேச்சாளர்கள்--
ஒலிபெருக்கி--நிழற்படம்--வில்லுப் பாட்டு என்று
விரிகிறது நிகழ்ச்சி!
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது!
முதல் அனுபவம் ஆதலால் --
மூச்சு முட்டுகிறது!
யாரிடம் எப்படிக் கேட்பது என்பது கூடச்
சரிவரத் தோன்றவில்லை!
சன்மார்க்க அன்பர்கள்--
சத்திய சீலர்கள் --
சங்கம் கண்டவர்கள் --
சாதித்தவர்கள் --கை கொடுங்களேன்!-என்று
கவிதையில் யாசிக்கிறது உள்ளம்!
நிதி மிகுந்தவர் -பொற்குவை தாரீர்..
நிதி குறைந்தவர்--காசுகள் தாரீர்--
அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்--என்றான்
பாரதிப் புலவன்!
அதை அப்படியே கடைப் பிடியுங்களேன்
அன்பர்களே!--என்று
அறிவு விண்ணப்பிக்கிறது!
ஆர்வப் பெருக்கில்
அல்லாடுகின்றேன் !
மனமெலாம் நைந்து
மன்றாடுகின்றேன்!
மாண்புமிகு மனிதர்காள்..!
மனம் வையுங்களேன் ..!
மனித நேயமுடன்..
கவிஞர் கங்கை மணிமாறன் எம்.ஏ.,பி.எட்.
அத்திப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
செல்;9443408824
மின் அஞ்சல்:rgangaimanimaran@gmail.com
Comments
Post a Comment