ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்!
ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்!
திருவருட் பிரகாச வள்ளலார் என்னும்
வெள்ளாடைத் துறவி--
பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில்
ஆன்மிகத் தடத்தில்
அழுத்தமான அடையாளத்தை
ஏற்படுத்திய -ஓர்
அபூர்வமான மாமனிதர்!
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும்
தெரிவரிய திருமந்திர மொழியை
எளியோர்க்கும்
தெளிவாக்கிய திருவருட்பா சீலர்!
கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட
உயரிய சன்மார்க்கி!
மனிதனைப் பிளந்த
மத மாச்சரியங்களை
சொற்களால் பிளந்த
சூத்திரதாரி!
கண்மூடி வழக்கங்கள்
மண்மூடிப் போவதற்காக
காடு மேடுகளைக் கடந்து
வடலூரில் வதிந்து
வாழ்வியல் போராட்டம் நடத்திய
வார்த்தைச் சித்தர்!
ஒன்பது வயதிலேயே
உறுபொருள் கண்டு
உலகச் சார்புகளை
உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக்
“கலகம்” செய்யவந்த
காருண்ய மூர்த்தி!
"கைவீசி நடப்பதும் கூட
காற்றில் உலவும் உயிர்களைக்
காயப்படுத்திவிடலாம் "என்னும்
காரணத்தால்-
கைகளைக் கட்டியே நடந்த
கருணைத் தென்றல்!
"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் "என்று
சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு
சமுதாயத்தைக் கெஞ்சிய
சரித்திர புருஷர் !
சித்துகள் தெரிந்தாலும் மனிதச் சித்தங்களைத்
திருத்தவந்த
சித்தயோகி!
அருளின் வடிவமான
ஆன்மநேயி!
அவதாரம் போல் வந்து
அநேக புரட்சிகளை
அரங்கேற்றிவிட்டுச் சென்ற
அற்புதத் தவசி!
பசிநீக்கவந்த
பரோபகாரி!
அவரைப் படிப்பதும் -
அவர்தம் சிந்தனைகளை மக்கள் மத்தியில்
எடுத்துரைப்பதும் .....
ஒரு சமுதாய மாற்றத்திற்கு
விதை போடும் முயற்சியாகும்!
ஆகவே- அதை மூலப் பொருளாக்கி
திருவருட்பிகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
என்னும் பெயரில் -
ஒரு சமுதாயச் சேவை நிறுவனத்தை -
வரும் ஆகஸ்டு-28 -ஆம் தேதி
அடியேன் தொடங்குகிறேன்!
"பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும்" நேராத
பழிதுடைக்கும் -அன்ன தானம் !
"கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும்"
அறியாமை தகர்க்கும் ஞானதானம் !
"சாதி சமயம் எனும் சழக்குகள் "களையும் -சமாதானம் !
"எவ்வுயிர்த் திரளும் இறைவன் "
என்பதை நிறுவும் உயிர் இரக்கம் !
"கோடையிலே இளைப்பாரக்" -குளிர்தருக்கள் வளர்த்தல்!
என்று
வள்ளல் பெருமானின் அடிநாதக் கோட்பாடுகள்
அனைத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் அறிமுகப் படுத்த வேண்டி
என் கிராமத்தில் தொடங்குகிறேன்-ஒரு பெரு விழா மூலம்!
ஏற்கெனவே மேடைப் பேச்சின் வழியே
தமிழ்நாட்டின் மிக முக்கிய மேடைகளை
அலங்கரித்திருக்கும் எளியேற்கு-
அருட்பெருஞ் சோதி ஆண்டவர்
ஆணையிட்டிருக்கிறார்-
சன்மார்க்கம் வருகவென்று என்றே
அடியேன் கருதுகிறேன் !
"அனைவரும் மனிதர்-
அனைத்துயிரும் கடவுள்-
ஆன்மா அழிவதில்லை-
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்முன்
அனைவரும் சமம்!
ஆரும் பசித்திருக்க
அனுமதிக்க மாட்டோம்!
அகிலமே ஒன்று!"-என்னும்
ஆதாரக் கொள்கைகளைத் தாங்கி
அடியேன் புறப்படுகிறேன்-ஒரு
தர்ம யுத்தத்துக்கு!
அறிவுப் புரட்சிக்கானஆயுதத்தோடு புறப்படும்
அடியேனை .....
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்கள்
அன்பால் ஆசிர்வதியுங்களேன்!
ஆதரவுக் கரம் நீட்டுங்களேன்!
கவிஞர் கங்கை மணிமாறன்
கங்காதரபுரம்
கோமல்-609805
மயிலாடுதுறை
செல்;9443408824
Comments
Post a Comment