பசிநீக்கவந்த பரோபகாரி!
திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் துறவி
பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில்
அழுத்தமான அடையாளத்தை
ஏற்படுத்திய -
எழுச்சிகரமான மாமனிதர்!
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும்
திருமந்திர மொழியைத்
தெளிவாக்கிய திருவருட்பா சீலர்!
கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட
உயரிய சன்மார்க்கி!
மனிதனைப் பிளந்த
மத மாச்சரியங்களை
சொற்களால் பிளந்த
சூத்திரதாரி!
கலையுரைத்த கற்பனைகளை
நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கங்கள்
மண்மூடிப் போவதற்காக
காடு மேடுகளைக் கடந்து
வடலூரில் வதிந்து
வாழ்வியல் போராட்டம் நடத்திய
வார்த்தைச் சித்தர்!
ஒன்பது வயதிலேயே
உறுபொருள் கண்டு
உலகச் சார்புகளை
உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக்
"கலகம்" செய்யவந்த
காருண்ய மூர்த்தி!
கைவீசி நடப்பதும் கூட
காற்றில் உலவும் உயிர்களைக்
காயப்படுத்திவிடலாம் என்னும்
காரணத்தால்
கைகளைக் கட்டியே நடந்த
கருணைத் தென்றல்!
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று
சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு
சமுதாயத்தைக் கெஞ்சிய
சரித்திர புருஷர் !
சித்துகள் தெரிந்தாலும் மனிதச் சித்தங்களைத்
திருத்தவந்த
சித்தயோகி!
அருளின் வடிவமான
ஆன்மநேயி!
அவதாரம் போல் வந்து
அநேக புரட்சிகளை
அரங்கேற்றிவிட்டுச் சென்ற
அற்புதத் தவசி!
பசிநீக்கவந்த
பரோபகாரி!
அவரைப் படிப்பதும் -
அவர்தம் சிந்தனைகளை மக்கள் மத்தியில்
எடுத்துரைப்பதும் --ஒரு சமுதாய மாற்றத்திற்கு
விதை போடும் முயற்சியாகும்!
ஆகவே- அதை மூலப் பொருளாக்கி
திருவருட்பிகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
என்னும் பெயரில் -
ஒரு சமுதாயச் சேவை நிறுவனத்தை -
வரும் ஆகஸ்டு-28 -ஆம் தேதி
அடியேன் தொடங்குகிறேன்!
ஆதரவுக் கரங்கள் நீட்டுங்களேன்!
அனைவரும் மனிதர்-
அனைத்துயிரும் கடவுள்-
ஆன்மா அழிவதில்லை-
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்முன்
அனைவரும் சமம்!
ஆரும் பசித்திருக்க
அனுமதிக்க மாட்டோம்!
அகிலமே ஒன்று!-என்னும்
ஆதாரக் கொள்கைகளைத் தாங்கி
அடியேன் புறப்படுகிறேன்-ஒரு
தர்ம யுத்தத்துக்கு!
ஆரத்தி எடுக்காவிட்டாலும்
அன்பால் ஆசிர்வதியுங்களேன்!
Comments
Post a Comment