உலகப் புரட்சியாளர்


இறைவன் எங்கும் இருக்கிறான் !
எங்கும் என்றால் -
எல்லாப் பொருளிலும் இருக்கிறான்!
இறைவன் இல்லாத இடம் --
எதுவுமில்லை!
தூணிலும் உளன்-துரும்பிலும் உளன்
அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன்!
என்பான் கம்பன்!
எங்கும் இருப்பவனை
எங்கோ இருப்பவன் என்று
எண்ணிவிட்ட அறியாமைதான்
இந்தச் சமுதாயத்தின்
சாபக் கேடு!
கல்லிலும் சிற்பத்திலும்
கர்ப்பக் கிரஹத்திலும்
இறைவன் இருப்பதாய் நம்பும் மனிதர்கள்
எல்லா உயிர்களிலும்
இறைவன் இருக்கிறான்
என்பதை மறந்து விடுகிறார்கள்!
கீழ் மேல் என்று எந்த வேறுபாடும்
கிடையாது-அவனுக்கு!
உயிர்கள் அனைத்திலும்
உறைகிறான் இறைவன் என்பதை உணர்ந்தவன்
தனக்குள்ளும் இருக்கிறான் இறைவன் என்பதைத்
தானே உணர்வான்!
தனக்குள்ளும் இருப்பவன்
பிறர்க்குள்ளும் இருப்பான் என்பதையும்
பிழையின்றி உணர்வான்.
அந்தப் பிறர்-
மனிதர் மட்டும் அல்லர்!
விலங்குகள் -பறவைகள்
சிற்றுயிர்கள் என்று
எல்லா ஜீவராசிகளும் தான்
என்பதையும் அவனே அறிவான்!
அறிவானாயின்..
கையெடுத்துத் தொழக்
கடவுளைத் தேடி-
ஆலயம் செல்ல வேண்டாம் !
அங்கங்கும் தொழலாம் -
அங்கங்கும் காணலாம் --!
அவனுக்குப் பாலாபிஷேகம் செய்ய-
ஒரு வறுமைக் குழந்தைக்குப்
பால் வாங்கிக் கொடுக்கலாம்!
அன்னாபிஷேகம் என்பது-
ஆதரவற்றவர்களுக்கு வழங்கும்  
அன்னதானம் என்பதை
அறிந்து உணரலாம்!
உயிர்கள் ஒவ்வொன்றும்
இறைவனின் வெவ்வேறு வடிவங்கள்
என்பதைத் தெளியலாம்!
கருணையில் இருப்பவன் கடவுள்!
கருணையாய் இருப்பவன் கடவுள்!
கருணைதான் கடவுள்!
இந்த உலகம் -கடவுளின் கருணை!
உயிர்கள் கடவுளின் கருணை!
உயிர்களை வதைப்பது
அவனுக்குச் சம்மதமில்லாதது!
வள்ளலாரின் உயிர்க் கொள்கையாய் இருப்பது --
இந்த உயிர் இரக்கம்தான் என்பதை
ஓதாமலே உணரலாம்!
ஆகவே---அன்பர்களே ..!
உயிர்களுக்கு இரங்குவோம்!
உலகப் புரட்சியாளர்
வள்ளலாரில்....இறங்குவோம்!

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!